தமிழ் வளர்த்த அறிஞர்கள்



வீரமாமுனிவர் (கான்ஸ்டன்டைன் ஜோசேப் பெஸ்கி) 1680
வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டன்டைன் Joseph பெஸ்கி என்பதாகும். அவர் 8.11.1680 அன்று இத்தாலியில் காஸ்திகிலியோன் என்ற இடத்தில் பிறந்தவர். 1709ல் சேசுசபைப் பாதிரியாரானபின் -1710ல் தமிழகத்துக்கு வந்தார். இவர் காவியம், பிரபந்தம், உரைநடை அகராதி, இலக்கணம், மொழிபெயர்ப்பு என்று பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். சதுரகராதி கொண்டு நிகண்டுக்கு ஒரு மாற்றைக் கொண்டு வந்தவர். தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.

கிபி 1712 இல் வீரமா முனிவர் பழைய நிகண்டு முறையைக் கைவிட்டு, அகராதி முறையில் சொற்பொருள் காணும் முன்னோடியாகத் திகழ்ந்து "சதுரகராதி" என்ற அகராதியை தொகுத்து வெளியிட்டார். முதன் முதலாக 'அகராதி' என்ற பெயரில் வந்த நூல் இதுவேயாகும்.

கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும் இரட்டை வழக்கு மொழியான தமிழில் பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும். கிருத்துவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக அமைந்தது இந்த நூல் என்றால் மிகையாகாது.

எனினும் இன்றைய கிருத்துவத் தமிழ் தனக்கென ஒரு வகை முறைமையை வகுத்துக் கொண்டு வழக்கில் இருக்கும் பேச்சுத் தமிழும் அல்லாத எழுத்துத் தமிழும் அல்லாத ஒரு வகைத் தமிழைக் கொண்டிருப்பது குறித்துக் கிருத்துவ நிறுவனங்கள் மறுமதிப்பீடு செய்தல் கிருத்துவத்துக்கும் தமிழுக்கும் நலன் பயக்கும் என்பது எனது கருத்து.

திருக்குறளில் அறத்தையும் பொருளையும் லத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை கிய நூல்களைப் படைத்தவர். இதில் பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த ஹாஸ்ய இலக்கியம் என்பதைச் சொல்லத்தானாக வேண்டும்.

திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள். காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் னது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார்.

 



© 2005 Kaniyatamil Software