சங்ககாலம்


மலைகளில் ஊறும் ஊற்று நீர் ஓடையாகி, ஆறாய் வழிந்து பல கிளை பிரிந்து காட்டின், மேட்டிடை ஓடி வரும். இதுபோல் பல ஆறுகள் உருவாகி ஒரு முனையில் பலவும் சங்கமிக்கும். இதுபோல் முல்லை, நெய்தல், குறிஞ்சி, மருதம், பாலை நில மக்களின் வாழ்வோடு இணைந்து வாழும் புலவர் பெருமக்கள். தத்தமது நிலம், காட்சி, புள்ளினம், விலங்கினம் மக்களின் களவொழுக்கம், வளம், வீரம் இவைகளை பாடு பொருளாக்கி அவரவர்கள் படைத்த நூல்களுடன் சங்கமிப்பார்கள். இவ்வாறு சங்கமிப்பதே சங்கம் என்பது. ஆன்றோரும், சான்றோரும், மூத்த புலவர் பெருமக்களும் சங்கமித்து சங்க அரங்கில் சூழ்ந்திருக்க பல்வேறு படைப்புகளும் அதன் திறனறிய பாடப்படும். ஆய்வு நடைபெறும். அதன் சீரிய திறமும், தரமும் சான்றோர்களால் ஏற்கப்பட்டு தமிழ் நூல்களின் நெடும் பட்டியலில் ஏற்கப்படும். அந்நூல் பலரால் கற்கப்படும், புகழப்படும். இவ்வாறுதான் தொண்மைமிக்க தமிழ் நூல்கள் தமிழுக்கு அணி செய்கின்றன, இன்றளவும் தமிழருக்கு பெருமை சேர்க்கின்றன.

தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, ஐந்குறுநூறு, குறுந்தொகை, நச்சினார்க்கினியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, அரும்பதவுரை, அறநெறிச்சாரம், அடியார்க்கு நல்லாமுறை, ஆசாரக் கோவை, இளம்பூரணரூரை, இன்னா நாற்பது, கல்லாடம், கலித்தொகை, கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம், குறிஞ்சிப்பாட்டு, சிறுபஞ்சமூலம், சிறுபாணாற்றுபடை, திருச்சிற்றம்பலக் கோவை, சூளாமணி, சேனுவரை பருரை, தண்டியலங்காரம், தினைமாலை நூற்றைம்பது, திரிகடுகம், நாண்மணிக் கடிகை, திவாகரம், நற்றிணை, நன்னூல், நாலடியார், நெடுநெல்வாடை, பட்டினப்பாலை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பெரும்பாணாற்று படை, மதுரைக் காஞ்சி, மலை படு கடாம், யாப்பருங்கலக்கரிகை, யாப்பருங்கலவிருத்தி, திருமுருகாற்றுப் படை, மாறனலங்காரம், திருக்குறள், ஆத்திச்சூடி எனப் பல நூல்கள் சங்க காலம், சங்கம் மருவிய காலம் எனப்புலவர் பெருமக்களால் பல்வேறு நூல்கள் தமிழருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் நூற்கள் மற்றும் தமிழ்ப்புலவர்கள் பட்டியலை ஒருவெண்பா வடிவில் தமிழ் கற்க வரும் மாணவருக்கு உரைக்க, ஒரு புலவர் எத்தகைய திறன் பெற்றவராக விளங்க வேண்டும் என்று ஒரு பாடலை தன் சிலப்பதிகார அரும்பதவுரை நூலில் உ.வே.சாமிநாதய்யர் குறிப்பிடுவது. நாம் அனைவரும் அறிய வேண்டிய பாடலாகும். இப்பாடல் திரட்டு உ.வே.சா அவர்கள் சுவடி நூல்களைத் தேடி நாடுதோறும் பயணப்பட்டபோது பாண்டி நாட்டைச் சேர்ந்த செவ்வூர் எனும் ஊரிலிருந்த சிற்றம்பலக்கவிராயர் என்பவரின் வீட்டில் இதனைக் கண்ணுற்றதாகக் குறிப்பிடுகிறார்.

"இடைச்சங்கமும் மற்றை இரண்டு சங்கங்களும் இருந்த இடம் முதலியவற்றைப் பின்வரும் ஆசிரியப்பாவால் உணர்க என்கிறார் உ.வே.சா.

"வேங்கடங் குமரி தீம்புனற் பௌவத்
திந்நான் கெல்லையினிருந்தமிழ் பயின்ற,
செந்நாப் புலவர் செய்தியீண் டுரைப் பின்
ஆடகக் குடுமி மாடக் கூடலின்
முன்னர்ச் சங்கக் கன்மாப் பலகையில்
திரி புர மெரித்த விரிசடைக் கடவுள்
மன்றன் மராத்தார்க் குன்றெறி யிளஞ்சேய்,
திணிடிறற் புலமைக் குண்டிகைக் குறுமுனி,
புவி புகழ் மருதங் கவினிய முரஞ்சிப்
பதிமுடி நாக னிதியின் கிழவன்,
இனையர்நா னூற்றுநாற் பத்தொன் பதின்மர்,
அனையர் நானான்காயிர நூற்றொடு,
நாற்பத்தொன் பதின்மர் பார்க்கிற்செந் தமிழோர்
புரிந்தன செய்யுட் பெரும்பரி பாடலும்,
முதுமை யடுத்த நாரையுங் குருகும்,
கதியுறச் செய்த களரியா விரையும்,
ஆங்கவ ரிருந்தது மத்தொகை யாகும்,
ஈங்கிவர் தம்மை யிரீஇயபாண்டியர்கள்,
காய்சின வழுதிமுதற் கடுங்கோனீறா,
ஏசி லாவகை யெண்பத்தொன் பதின்மர்,
கவியரங் கேறினா ரெழுவ ராகும்,
மகத்துவ முடைய வகத்திய மிலக்கணம்,
வடுவறு காட்சி நடுவட்சங்கத்,
தகத்தியர் தொல்காப் பியத்தமிழ் முனிவர்,
இருந்தை யூரிற் கருங் கோழி மோசியார்,
எள்ளாப் புலமை வெள்ளூர்க் காப்பியன்,
இறவா விசையிற் சிறுபாண்ட ரங்கன்,
தேசிக மதுரை யாசிரியன் மாறன்,
தவரொப்பாய துவரைக் கோமான்,
தேருங் கவிபுனை கீரந்தை யாரிவர்,
ஒன்பதோடடுத்த வைம்பதின்ம ராகும்,
தவலருங் கேள்வித் தன்மைய ருள்ளிட்,
டிவர்மூ வாயிரத் தெழுநூற் றுவரே,
வையகம் பரவச் செய்த செய்யுளும்,
இருங்கலி கடிந்த பெருங்கலித் தொகையொடு,
குருழுவெண் டாளி தெருள்வியாழ மாலை,
அந்நா ளிலக்கண மகத்திய மதனொடு,
பின்னாட் செய்த பிறங்குதொல் காப்பியம்,
மதிநலங் கவின்ற மாபு ராணம்,
புதுநலங் கனிந்த பூத புராணம்,
வல்லிதி னுணர்ந்த நல்லிசை நுணுக்கம்,
தாவாக் காலந் தமிழ்பயின் றதுவும்,
மூவா யிரத்தோ டெழுநூற் றியாண்டு,
பரீஇய சங்கமிரீஇயபாண் டியர்கள்,
வெணடேர்ச் செழியன் முதலா விறல்கெழு,
திண்டேர்க் கொற்ற முடத்திரு மாறன்,
முரசுடைத் தானை மூவா வந்தம்,
அரசு நிலை யிட்டோ ரைம்பத்தொன் பதின்மர்,
இவ்வகை யரசரிற் கவியரங்கேறினர்,
ஐவகை யரச ராயிடைச் சங்கம்,
விண்ணகம் பரவு மேதகு கீர்த்திக்,
கண்ணகன் பரப்பிற் கபாடபுர மென்ப,
அருங்கடைச் சங்கமிருந்தோர் யாரெனிற்,
சிறுமே தாவியார் சேந்தம் பூதனார்,
அறிவுடையரனார் பெருங்குன் றூர்கிழார்,
பாடல் சான்ற விளந்திரு மாறன்,
கூடலாசிரியர் நல்லந் துவனார்,
பரவுதமிழ் மதுரை மருதனிளநாகர்,
அவிர்கணக்காயர் நவினக் கீரர்,
கீரங் கொற்றர் கிளர்தே னூர்கிழார்,
ஒருங்கலைமண லூராசிரியர்,
நல்லூர் புளியங்காய்ப் பெருஞ்சேந்தர்,
செல்லூரசிரியர் முண்டம் பெருங்குமரர்,
முசிறியா சிரியர் நீல கண்டனார்,
அசைவிரி குன்றத் தாசிரிய ரன்றி,
நாத்தலங் கனிக்குஞ் சீத்தலைச் சாத்தர்,
முப்பாலுணரு முப்பூரி குழகிழார்,
உருத்திர சன்மர் மருத்துவராகிய நாம நாற்கலைத் தாமோதரனார்,
மாதவள னாரோ டோதுமிள நாகர்,
கடியுங்காமப் படியங் கொற்றனார்,
அருஞ்செய லூர்வாழ் பெருஞ்சுவனாருடன்,
புவிபுகழ் புலமைக் கபிலர் பரணர்,
இன்னாத் தடிந்த நன்னாக ரன்றியும்,
ஒல்காப் பெருமைத் தொல்காப் பியத்துக்,
குரையிடையிட்ட விரகர் கல்லாடர்,
பேர்மூல முணரு மாமூலர் தம்மொடு,
விச்சை கற்றிடு நச்செள்ளை யார்முதல்,
தேனூற் றெடுப்பச் செந்தமிழ் பகர்ந்தோர்,
நானூற்றுவர்முத னாற்பத்தொன் பதின்மர்,
பீடுபெற வுலகிற் பாடிய செய்யுள்,
முத்தொள்ளாயிர நற்றிணை நெடுந்தொகை,
அகநானூறு புறநானூறு,
குறுந்தொகை சிற்றிசை பேரிசை வரியோ,
டறம் புகல் பதிற்றுப்பத்தைம்பதோ டிருபான்,
பெறும்பரி பாடலுங் குறுங்கலி நூற்றைம்,
பதுமுதலாகிய நவையறுங் கலைகள்,
அக்கா லத்தவர்க் ககத்திய மதனொடு,
மிக்காமிலக்கணம் விளங்குதொல்காப்பியம்,
எண்ணூற் கேள்விய ரிருந்த தாயிரத்,
தொண்ணூற் றைம்பது வருட மென்ப,
இடர்ப்படா திவர்களைச் சங்கமிரீஇயனார்,
முடத்திரு மாறன் முதலா வுக்கிரப் பெருவழுதி யீறாப் பிறங்கு பாண்டிய,
நரபதிக ளாகு நாற்பத்தொன்பதின்மர்,
இவருட் கவியரங்கேறினர் மூவர்,
புவியிற் சங்கம் புகழ்வட மதுரை ,
ஆதிமுச் சங்கத் தருந்தமிழ்க் கவிஞர்,
ஓதிய செய்யு ளுலவாப் பெரும்பொழுள்,
வாளாக் கேட்குந் தோளாச் செவிக்கும்,
கேட்டுந் தெரியா வோட்டைநெஞ் சினுக்கும்,
நுழையாவாதலி னுழைபுலன் றன்னொடும்,
விழைவார்க் குரைக்க வேன்டுவர் தெரிந்தே....

ஆக மேற்காணும் இந்த பாடலின் உட்பொருளாய் இருப்பது, தமிழ் நூல் படைத்த ஆசிரியர்கள் பட்டியல் மட்டுமல்ல. ஒரு தமிழ் நூல் எத்தகைய சிறப்புடன் விளங்க வேண்டும், அதனை எத்தனை பேர் ஆய்வு செய்து அந்நூலை பொது நூலாக வழங்க வேண்டும் என்பதை தெளிவாக்குகிறது. ஒரு நூலை ஆய்வு செய்வதன் வாயிலாக சமூகத்திற்குள் எத்தகைய கருத்துக்கள் பரவ வேண்டும் என்ற அறிவு நோக்கில் சிந்தித்தவர்கள் நம் புலவர் பெருமக்கள். இந்த சிறப்பு உலக மொழியில் உள்ள எந்த இலக்கியங்களுக்கும் இல்லை.



© 2006 Kaniyatamil Software