தமிழ் - ஒர் தொன்மை வாய்ந்த மொழி


தமிழ் இலக்கியங்களின் வகைப்பாடு

தமிழ் இலக்கியங்களில் வெளிப்படுத்தாத கருத்துக்கள் எவையுமில்லை. இயற்கை, மானுடம், காதல், வீரம், அறம், கொடை, ஆட்சியியல் என உலகிற்குத் தேவையான அனைத்தையும் தன்னகத்தே கொண்டது. உலக மொழி எதிலும் இந்த அளவுக்கு அளப்பறிய அறிவுச் செல்வம் இல்லை. தமிழ் மொழியில் மட்டும் தான் உள்ளது. இலக்கியங்களில், குறிப்பாக சங்க கால நூல்களில் பெரும்பான்மையான நூல்கள் வாழ்க்கையின் அகத்தையும் புறத்தையும் அடிப்படையாய் வைத்து அந்தந்த திணை நிலங்களின் இயற்கையோடு இயையுற பாடப்பட்டுள்ளன.

சங்ககாலத்தில் இலக்கிய அடிப்படையான அகம், புறம், திணை எனும் நிலை. அமைதியான தமிழ் நில வாழ்க்கைச் சூழலில் களப்பிரர் எனும் அன்னியர் வருகையால் பாதிப்பிற்கு உள்ளானது. இந்த பாதிப்பிலிருந்து தமிழர் தம்மின் பண்பு நலன்களை மரபு வழிப்பட்டவைகளைக் காக்க அகத்துறை, புறத்துறை எனும் நிலையிலிருந்து இருதுறைகள் கூறும் வாழ்க்கை இன்ப நிலைக்குப் பதிலாக வாழ்க்கையின் இன்பத்தை விட அறம் சிறந்தது என்ற கருதுகோள்களுடன் இலக்கியம் பிறந்தது. இவை அறம் - பொருள் - இன்பம் ஆயின. இக் காலத்தை இலக்கியவியலார் நீதிக்காலம் என்பர். பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் அறத்தை முன்னிலைப்படுத்தி பாடப்பட்ட பாடல்கள் 3250. இப்பாடல்கள் பாடிய புலவர்கள் தமிழ் மக்கள் இன்பம் எனும் ஒன்றிலேயே மூழ்கி இருப்பதை விடுத்து இன்பத்தை நிலைக்க வைக்கும் அறத்தைக்கூறும் பாக்களை இயற்றினர்.
அகம் - புறம் - திணை கோட்பாட்டில் அறம் - பொருள் - இன்பம் என்ற மாற்றம் கண்டு விளங்கிய இலக்கியங்கள் தமிழ் மொழியின் ஒரு திருப்புமுனையைக் கண்டது எனலாம். ஆயின் பல்லவர் வருகையால் தமிழ்மொழிக் கலப்பிற்கு ஆட்பட்டது. ஏற்கெனவே படைக்கப்பட்ட இலக்கியங்கள் தமிழ்மொழியின் செம்மை நிலை மாற்றமில்லாமல் கற்கப்பட்டன. எனினும் பல்லவர் ஆட்சியின் நீள்கரங்கள் தமிழில் வடசொல்லைக் கலப்பதில் ஈடுபட்டது. தமிழில் புதிய படைப்புகள் வெளியாவது தடைப்பட்டது. பல்லவர் ஒழிந்து சோழர்களிடம் அரசியல் சென்ற பின்னும் தமிழ் மொழியில் வடமொழிக் கலப்பு குறையவில்லை. அதனூடாகவே அகப்பொருள் சாயலுடன் பக்தி இலக்கியம் எனும் புதிய இலக்கியப் பண்பாடு வேறூன்றியது. சோழர் காலம் முழுமையும் பக்தி இலக்கியமே மேலோங்கியது.

சோழர்களுக்கும் பின்னர் சோனகர் எனும் முகமதியர் வருகையால் தமிழ் மொழிக்குள் அரபுக்கலப்பு ஏற்பட்டது. தமிழ் மொழியின் வளத்தில் வடமொழியும், அரபுமொழியும் ஒன்று கலந்தன. அரபு இலக்கியச் சாயலில் தமிழுக்கு புது வரவாய் பேரிலக்கியம் படைக்கும் இலக்கிய வகையிலிருந்து சற்றே மாறுபட்டு சிற்றிலக்கியம் படைக்கும் துறையாக தமிழ் இலக்கியத்துறை விளங்கியது. சிற்றிலக்கியம் புதுவடிவாக மட்டுமில்லாது ஏராளமான படைப்பாளர்களையும் உருவாக்கியது.

அச்சு இயந்திரங்களின் வருகைக்குப்பின் வீரமா முனிவர் வெண்பா, செய்யுள், கவிதை நடையிலிருந்து வேறுபட்டு உரைநடையில் நூலாக்கம் செய்தார். தமிழ் இலக்கிய மரபில் இது புது வரவு. இவ்வாறு தமிழ் மொழி காலம் தோறும் புதுவரவுகளால் வந்த படைப்புகளையும் தன்னுள்ளே ஏற்றுக் கொண்டும் மேலும் வளரும் அறிவியல் தொழில் நுட்ப வளங்களையும் தன்னகத்தே ஆட்கொண்டு சிறப்புடையதாக விளங்கும் தமிழ், இயற்கை மொழிக் குடும்பத்தில் தன்னிகரற்று விளங்குகிறது. அதுவே இதன் தனிச்சிறப்பாகும்.© 2005 Kaniyatamil Software