தமிழ் - தமிழர் வரலாறு
மொழி


தமிழையும் அதைப் பேசும் தமிழரையும் தனித்தனியாய் நோக்குதல் பிழையே. எனவே தமிழ் வரலாறு என்பதே தமிழரின் வரலாறு தான்.

உலகில் இன்றுள்ள இயற்கை மொழிக் குடும்பத்தில் மிக மிக, மூத்த மொழி தமிழ். ஒரு மொழியின் தொன்மையை அளவிட வேண்டுமாயின் அம் மொழியில் அமையப் பெற்றுள்ள இலக்கியங்களே சான்றாகும். அவ்வகையில் தமிழின் பழமையை, அதன் வளமான செழுமையைக் கூற ஏராளமான இலக்கியச் செல்வம் மிகுந்துள்ளது.

தமிழ் மொழியின் வரிவடிவங்கள் காலம்தோறும் மாறியுள்ளது. அன்றி அதன் ஓசை நயம் சிறிதும் மாறவில்லை. உலகின் ஏனைய சில மொழிகளில் குறிப்பாக பழங்குடி இன மக்கள் பேசும் மொழிகளில் ஒரு சில தமிழ் மொழி ஒலியைப் போன்றே இருப்பினும் வரிவடிவில் அவைகளுக்கு உருவமில்லை. அத்தகைய சிறப்பு ழகாரத்திற்குண்டு.

தமிழ்மொழி பழமையின் எடுத்துக்காட்டு

மொழியின் பழமையை எடுத்துக்கூற அம்மொழி மாந்தர் வாழ்ந்த பண்டைய பண்பாட்டுத் தகவாக விளங்கும் பலவற்றில் தொல்காப்பியம் - முதன்மையாய் விளங்குகிறது. அதைப் போன்ற புறநானூறும், அகநானூறும், பத்துப்பாட்டும் விளங்குகின்றன. இருப்பினும் சிலப்பதிகாரம் அன்றைய தமிழ் நிலப்பரப்பையும், அதை ஆண்ட மன்னவனின் சிறப்பையும் பதிவு செய்துள்ளது நினைவு கூறத்தக்கது.

பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிகோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையு மிமய முங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி


-சிலப்பதிகாரம்

மேற்காணும் பாடல் வரிகள் தமிழர் நிலத்தை அதன் எல்லையைக் கூறுகின்றது. ஆக செழுமையான காப்பியத்தில் இதனைக் குறிப்பிடும் காலத்துக்கு முன்பே. தமிழர் ஓங்கிய பண்பாட்டு சமூக வாழ்க்கையில் திளைத்திருந்தனர் என்பது தெளிவாகிறது.
சிலப்பதிகாரம் சுட்டும் பஃறுளி ஆறு கடல் கோளால் மறைவுற்றது எனும் கூற்று இன்று வெள்ளிடை மலையாய் தெளிவாகியுள்ளது. ஆம், சங்க காலத்திற்கும் முற்பட்ட தமிழர் நிலம் அழிவுபட்டுள்ளது.

தமிழர் நிலம்

கடல் கோளால் தமிழர் நிலத்தின் பெரும் பகுதி அழிவுற்றது என்ற கடந்த கால அறிஞர் கூற்றை சிலர் மறுத்தனர். ஆயின் பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சமீப காலத்தில் தோன்றிய ஒரு ஆழிப்பேரலையின் அழித்தலில் தமிழரின் நிலம் பெருமளவு சிதைவுற்றது. 2004 - திசம்பர் திங்கள் 26ஆம் நாள் 2500ஆண்டிற்கு முன் நிகழ்ந்த தமிழர் வாழ்ந்த பகுதியில் நடைபெற்ற அழிவை நினைவு கூறத்தக்க வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் - தமிழர் வாழ்ந்த கரையோர ஊர்கள் 376 சேதமானது. இங்கு வாழ்ந்த எட்டாயிரம் பேர் உயிரிழந்தனர். தமிழர் தம் கால்நடைச் செல்வங்கள் ஒன்பதாயிரத்து ஐந்நூறு மாண்டது. மூன்றாயிரத்து ஐந்நூறு மக்கள் பேரலையின் அழிப்பில் பலவாறாக தூக்கி வீசப்பட்டும், தப்பித்துச் செல்லும் போதும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமுற்றோர், இந்த விளைவுகளால் அச்சமுற்று ஐந்து இலக்கம் பேர் இடம் பெயர்ந்தனர். ஒரு இலக்கத்திற்கும் மேற்பட்ட வல்லம், கட்டு மரங்கள் பாழாயின. ஆக பழவேற்காடு தொடங்கி, குளச்சல் துறை வரை மட்டும் ஐந்து நிமிட ஆழிப் பேரலையின் அழிவுப்பட்டியல் இது என்றால் ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுக்கு முன்பு பெருநிலப்பரப்பில் வாழ்ந்து அழிந்த தமிழினத்தின் உண்மை நிலையை நாம் தெளிவாய் உணரலாம்.


courtesy : Thirukural, International Tamil Foundation, USA


© 2006 Kaniyatamil Software