மெய்யைத் தெரிந்தவன் ஏமாறுவதில்லை
கிட்டத்தட்ட நாமறிந்த இயேசுபிரானை ஞாபகப்படுத்தும் தோற்றம். கண்டவரைத் தன்பால் ஈர்க்கும் பார்வை.
முதல் சந்திப்பிலேயே என்னை அந்த மனிதர் மிகவும் கவர்ந்துவிட்டார்.
அந்தக் கணம் வரை, நான் எந்தவொரு முடிவையும் துணிவுடன் எடுக்க முடியாதவனாக இருந்தேன்; மனம் முழுதும் எதிர்மறை எண்ணங்களால் நிறைந்து குழம்பிப்போய் இருந்தேன்; நடக்குமா? நடக்காதா? என்ற பரிதவிப்புடன் வாழ்வை உருட்டிக்கொண்டிருந்தேன். நான் ஒரு சினிமாப் பட ஒளிப்பதிவாளன்.
அந்த முதல் சந்திப்பு எனக்குள் நிகழ்த்திய அசாத்திய ரசாயன மாற்றத்தை என்னால் முழுமையாக விவரிக்க இயலவில்லை. எனது ஆன்மிகத் தேடலுக்கும், தொழில் ரீதியான தேடலுக்கும் ஒரு மிகச் சரியான தீர்வை இந்தச் சந்திப்பு ஏற்படுத்தியது.
சிவன் மட்டுமே நம்மை வழி நடத்துகிற மெய்யான சக்தி. சிவனை வழிபட்டால் போதும். நம் வாழ்வே வழிபாடாக மாறும். எல்லா நிகழ்வுகளிலும் மகிழ்ச்சியின் தித்திப்பு கிட்டும். மெய் என்ற ஒன்றை அடைய இதுவே மார்க்கம். இதுதான் திரு.சி.கபிலன் அவர்களின் தத்துவம்.
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயலும் ஆன்மிகவாதிகள் மத்தியில், மெய்யைத் தேடுகிற மையலை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தும் புரட்சியாளராகக் கபிலன் அவர்கள் திகழ்கிறார்.
"மெய்யைத் தெரிந்து கொண்ட யாரும் எந்த நேரத்திலும் எதிலும் ஏமாறுவதில்லை". இதை மிகச் சாதாரணமாகச் செய்து கொண்டிருந்த கபிலன் அவர்கள் என் மனதை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டதென்னவோ உண்மை தான்.
வாழ்க்கைப் பாடத்தில் நாம் போட்ட கணக்கு தப்புக் கணக்காகிவிட்டதே என்பதைச் சொன்னால் (அவர் மனதில் என்ன சூட்சும சூத்திரம் இருக்குமோ, அது அவருக்கும் அந்தச் சிவனுக்கும் மட்டுமே தெரியும்) ஒரு நொடியில் நாளெல்லாம் தொடர்ந்த குழப்பத்தைத் தீர்க்கும் முடிவைச் சொல்லிவிடுவது கபிலன் அவர்களின் இயல்பு. இதைக் கண்டு நான் பலமுறை வியந்து போய் இருக்கிறேன்.
அத்தனையும் அறிந்திருந்தும் மிக எளிமை... இது எப்படிச் சாத்தியமோ? எப்போது என்னைப் பார்த்தாலும் "ஏதாவது புதிதாய்ச் சொல்லுங்கள் முத்ரா" என்பார். எனக்குச் சிரிப்புதான் வரும். அவருக்குத் தெரியாதது எதை நான் புதிதாய்ச் சொல்லப் போகிறேன்...? எனக்குள் மலைப்பு வரும்...!
நொடிக்கு நொடி புதிதாய் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் முனைப்பு... இது பற்றி நான் அவரிடம் போட்டபோது "மாற்றம் ஒன்று தான் மாறாதது" என்றார்.
எல்லோருக்கும் ஆசிரியனாய் இருந்து கொண்டே எல்லோரிடமும் மாணவனாய் இருக்கும் பாங்கு... இப்படி ஒரு மனநிலை. கொஞ்சம் தெரிந்துகொண்டு உலகை விலை பேச நினைக்கும் தலைக்கனம் பிடித்த மனிதர்கள் மத்தியில் கபிலன் அவர்கள் ஒரு.... மா மனிதன்.
என்றாவது ஒரு நாள் எங்களுக்கும் முழுமையான மெய் எது? என்பதை அறிவுறுத்துவார் என்ற நம்பிக்கையுடன் அவர்காட்டும் பாதையில் சென்று கொண்டிருக்கிறேன்.
அன்புடன்
முத்ரா.
|